இந்தியாவில் மெதுவாக பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக மிளகாய்க்கு எப்படி ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று இங்கே காணலாம்.
நாட்டின் மிகப்பெரிய மிளகாய் மார்க்கெட் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் புகழ்பெற்ற குண்டூர், தேஜா வகை மிளகாய்களின் விலை 50 சதவீத அளவிற்கு தடாலடியாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதே ஆகும். ஏனெனில் இந்திய மிளகாய்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது.
தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கிய உடனேயே, வெளிநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதி பொருட்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. இது ஆந்திரா மற்றும் தெலங்கானா விவசாயிகளை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக மிளகாய் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 அளவிற்கு விலை சரிந்துள்ளது.
அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் காரணியை கொண்டுள்ள மிளகாய், விலை சரிவிற்கு முன்பு குவிண்டால் ஒன்று ரூ.9,000 முதல் ரூ.12,000 வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் தேஜா வகை மிளகாய் விலை குவிண்டால் ஒன்றிற்கு ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை விற்கப்பட்டது. தேஜா வகை மிளகாயின் விலை சரிவு தரம் குறைந்த ரகங்களின் விலையையும் பெரிதும் பாதித்துள்ளது.